சீனி மற்றும் ஏனைய இனிப்புகளை எடுக்கக் கூடாது என்றே இதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்படுகிறது.
ஆனால் அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் நீரிழிவாளர்களின் உணவு முறையில் இனிப்பிற்கும் நிச்சயம் ஓரளவு இடம் உண்டு.
புதிய கோட்பாடு
இப்பொழுது நீரிழிவாளர்களின் உணவு என்பது ஒரு சில உணவுகளை முற்றாகத் தவிர்ப்பதும் வேறு சிலவற்றை அதிகம் உண்பதும் என்ற பழைய கோட்பாட்டில் இல்லை. அதே போல உணவு அட்டவணையை கையில் வைத்து அதன்படி அளந்து சாப்பிடுவதும் தினசரி வாழ்வில் சாத்தியமில்லை.
நீரிழிவின் கட்டுப்பாட்டிற்கு முழுமையான ஆரோக்கிய உணவுத் திட்டம் தேவை.
அதன் முக்கிய அம்சம் எந்த உணவானாலும் கட்டுப்பாடு மீறாமல் அளவோடு உண்பதுதான்.
மாப்பொருளின் அளவு
நீரிழிவாளர்களின் உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, இனிப்பு, பால், பழம், காய்கறிகள், மது முதலியன எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பதை நீரிழிவாளர்களின் உணவு பிரமிட் (Diabetic Food Pyramid) விளக்கப் படம் தெளிவாகக் காட்டுகிறது.
உணவில் மாப்பொருளின்
carbohydrate அளவு மிக முக்கியமானதாகும். இதனை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் உட்கொள்ளும் கலோரி சத்து அதிகமாகும். இது நீரிழிவை அதிகரிக்கும்.
மாப்பொருள் என்பது நீங்கள் உட்கொள்ளும் சோறு, இடியப்பம், நூடில்ஸ் போன்றவற்றில் மாத்திரமின்றி உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளிலும் உண்டு.
சீனி, சர்க்கரை போன்றவற்றிலும் உண்டு. எனவே இத்தகைய மாப்பொருள் உணவுகளை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.
ஆயினும் பழவகைகள் மரக்கறிகள் மற்றும் தவிடு நீக்காத தானிய வகைகளை விட, சொக்கிளட், சீனி, தேன், மற்றும் இனிப்புப் பண்டங்கள் அனைத்துமே இரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாகவும் விரைவாகவும் , அதிகரிக்கின்றன என நம்பப்பட்டது.
அதில் உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால் அவற்றைத் தனியே உட்கொள்ளும் போதுதான் பாதிப்பு அதிகம்.
இனிப்பைத் தனியே உண்ண வேண்டாம்.
எனவே நீரிழிவு நோயாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
விரைவாக உறிஞ்சப்படும் இனிப்புப் பண்டங்களை உண்ணும் போது அவற்றைத் தனியாக உண்ணக் கூடாது. ஆறுதலாக உறிஞ்சப்படும் உணவுவகைகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
பொதுவாக நார்ப்பொருள் அதிகமுள்ளவையே படிப்படியாகச் (ஆறுதலாக) சமிபாடு அடைபவை ஆகும். காய்கறிகள், பழவகைகள், தவிடு நீக்காத தானிய (அரிசி, கோதுமை, குரக்கன்,) வகைகளும் அவற்றில் தயாரிக்கும் உணவுவகைளும், பழவகைகளும் இவற்றில் அடங்கும்.
சோயா, பயறு, பருப்பு, கௌபீ, போஞ்சி, பயிற்றை போன்ற அவரையின உணவுகள் ஆறுதலாகச் சமிபாடடைவதால் அவ்வாறு இனிப்பு சாப்பிடும்போது கலந்து உண்ண ஏற்றவையாகும்.
இனிப்பின் அளவும் முக்கியம்
இனிப்பும் சாப்பிடலாம் என்று சொன்னவுடன், ஒரு பெரிய பார் சொக்கிளற், குக்கீஸ், பல லட்டுகள் என ஒரேயடியாக அமுக்கலாம் என நினைக்க வேண்டாம்.
ஏனெனில் முன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இவை வெறும் கலோரிக் குண்டுகள். இவற்றில் அதிகளவு கொழுப்பும் மாப் பொருளும் மட்டுமே இருக்கின்றன. விற்றமின், தாதுப்பொருள், நார்ப்பொருள் போன்றவை மிகக் குறைவே. எனவே இனிப்பு என்பது நீரிழிவாளர்களின் உணவில் ஒரு சிறு பகுதியாகவே இருக்க வேண்டும்.
இனிப்பும் ஒருவகை மாப்பொருளே. அதே போல சோறு, பாண், இடியப்பம், போன்ற ஏனையவும் மாப்பொருள் என்பதை மேலே கண்டோம். எனவே அத்தகைய மாப்பொருள் உணவுகளை வழமையான அளவில் உட்கொள்வதுடன், இனிப்பையும் மேலதிகமாக உண்டால் நீங்கள் உட்கொள்ளும் மாப்பொருளின் அளவு அதிகரித்துவிடும்.
எனவே இனிப்பு எடுக்கும்போது நீங்கள் உட்கொள்ளும் கலோரிப் பெறுமானம் அதிகரிக்காது இருப்பதை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்
1. நீங்கள் உட்கொள்ளும் இனிப்பிற்கு ஏற்ப ஏனைய மாப்பொருள் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
2. மாப்பொருள் உணவை ஒரு நேரத்தில் முற்றாகத் தவிர்த்து, அதற்கேற்ற அளவில் இனிப்பை தனியாக சேர்க்கலாம்.
ஆயினும் சேர்த்து உண்ணும்போது சமிபாடு விரைவாக நடக்காது என்பதால் முதலாவது முறையே சிறந்தது என்பேன்.
கலோரிச் சத்தற்ற இனிப்புகள்
நிரிழிவு நோயாளர் பாதிப்பின்றி இனிப்பு வகைகளை உண்பதற்கு மற்றொரு வழியும் காத்திருக்கிறது.
சீனி, சர்க்கரை போலவே இனிப்புச் சுவை உள்ள ஆனால் கலோரிச் சத்தற்ற செயற்கை இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம். Aspartame, Saccharin. Sucralose போன்றவை அத்தகைய மாற்று இனிப்புகளாகும்.
இவற்றை உங்கள் தேநீர், கோப்பி போன்ற பானங்களுக்கு சேர்த்து இனிப்புச் சுவையைப் பெறலாம்.
அப்பம், புட்டு, கேக் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் போதும் வழமையான சீனி சர்க்கரைக்குப் பதிலாக அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இனிப்பு மதுவங்கள்
நீரிழிவாளருக்கான உணவுகள் என்ற லேபலுடன் டொபி, சூயிங் கம், டெஸேர்ட் போன்ற பலவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் சீனி அல்லது செயற்கை இனிப்பிற்குப் பதிலாக இனிப்பு மதுவங்கள் சேர்ந்திருக்கும். 'Isomalt', "Maltitol," "Mannitol," "Sorbitol" and "Xylitol."போன்றவையே அத்தகைய இனிப்பு மதுவங்கள். இவற்றில் ஒரளவு கலோரிப் பெறுமானம் உண்டு. எனவே அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். அத்துடன் இவை சிலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.
நீரிழிவாளருக்கான உணவுகளை வாங்கும் போது அதில் என்ன இனிப்புக் கலந்திருக்கிறது என்பதை லேபலைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.
எது எவ்வளவு எதனுடன் ?
இறுதியாகச் சொல்வதானால் நீரிழிவாளர்களின் உணவுத் திட்டத்தில் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பது அவ்வளவு முக்கியமானது அல்ல. அதைவிட எவ்வளவு உண்கிறீர்கள், எதனுடன் சேர்த்து உண்கிறீர்கள் என்பவையே முக்கியமானது.
சற்று அறிவு பூர்வமாகச் சிந்தித்து உண்டால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்ட உணவுகளையும் உண்ண முடியும்.
எம்.கே.முருகானந்தன்
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment