Pages

விரதத்தை முடித்தார்: “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே

லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றது. இதனையடுத்து ஹசாரே இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இவருக்கு 3 சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார். இது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என ஹசாரேஆதரவாளர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதம் முடிந்ததும் இசை கலைஞர்கள் மகிழ்ச்சி பொங்கிட பாடினர். ஹசாரே கை தட்டியபடி ரசித்தார்.

பார்லி.,யை விட பலமானது மக்கள் சக்தி ஹசாரே பேச்சு: விரதத்தை முடித்து மேடையில் பேசிய ஹசாரே, எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது மக்கள் நடத்திய போராட்டம். பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இளைஞர்கள் சக்தி இந்த போராட்டத்தில் சிறப்பு இடத்தை பிடித்தது. மக்கள் சக்தி பார்லி.,யை விட பலமானது என்பதை நினைவுப்படுத்துகிறேன். நடந்து முடிந்திருக்கும் இந்த போராட்ட அணுகுமுறையில் எவ்வித அசம்பாவிதமும், சட்ட ஒழுக்கத்துடன் நடந்திருக்கிறது. இது ஒரு சிறப்பான முன்னுதாரணம் ஆகும்.

கல்வி- தேர்தல் சீர்திருத்தம் அடுத்த இலக்கு: இன்னும் தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் , கல்வி கொள்கை, விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் பிரச்னையை முன்வைத்து அடுத்தக்கட்டமாக போராட இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். ‌தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை நமக்கு வேண்டும். பேசி முடித்ததும் ஹசாரே பாரத் மாதக்கி, வந்தே மாதரம், இன்குலாப் என உரத்த குரலில் எழுப்பினார். தொடர்ந்து மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் பதில் தொடர் கோஷம் எழுப்பினர்.

290 மணி நேரம் விரதம் இருந்த ஹசாரே: அன்னா ஹசாரே கடந்த 16 ம் தேதி முதல் இன்று 28 ம் தேதி காலை வரை உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. அவரது உடலை பரிசோதிக்க 10 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவ்வப்போது செக்அப் செய்தனர். 11 வது நாளில் மட்டும் இவரது ரத்த அழுத்தம் மிக குறைந்தது. இதய துடிப்பும் அதிகரித்து இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று டாக்டர்கள் கவலையில் இருந்தனர். இருப்பினும் உள்ளத்தில் சோர்வடையாத ஹசாரே மேடையில் ஆதரவாளர்களிடம் பேசுகையில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யாரும் எனது உடல் நிலை குறித்து கவலை அடைய வேண்டாம் என்றார். மேலும் மசோதா தொடர்பான தீர்மானம் நிறைவேறாத பட்சத்தில் இந்த மேடையை விட்டு போக மாட்டேன் என கூறியிருந்தார். இதனை முடித்துக்காட்டினார் ஹசாரே அரசை பணிய வைத்தார். இது இவருக்கு கிடைத்த பெரும் வெற்றி மாலையாக மாறியது.
மொத்தம் ஹசாரே 290 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். இருப்பினும் இவரிடம் அவ்வித சோர்வையும் காண முடியவில்லை. இன்று காலை குழந்தைகள் கொடுத்த தேன் கலந்த இளநீரை பருகி தனது விரதத்தை முடித்தார். இருப்பினும் இவரை முழுமையாக சோதிக்க டாக்டர்கள் குர்கான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இவர் ஆஸ்பத்திரியில் 2 அல்லது 3 நாள் உள் நோயாளியாக சேர்க்கப்படுவார் என தெரிகிறது.

சென்னையில் கொண்டாட்டம்: ஹசாரே உண்ணாவிரதம் முடித்த செய்தியை அடுத்து நாடு முழுவதும் இவரது ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சென்னையில் ஹசா‌ரே ஆதரவாளர்கள் பைக் மூலம் பேரணியாக சென்றனர்.

சுதந்திர தின மறுநாளில் துவங்கிய இந்த உண்ணாவிரத போர் நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலையை எழுப்பியது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஹசாரேவுக்கு ஆதரவு குரல் ஒலித்தது. அவர் உண்ணாவிரதம் துவங்கிய ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,க்கள் அமைச்சர்கள், பிரதமர் வீடு முற்றுகையிடப்பட்டது.

இதனால் மத்திய அரசு பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து லோக்பால் பார்லி., விவாதத்திற்கு ஒப்புக்கொண்டது. ஜன்லோக்பால் (ஹசாரேயின் அம்சங்கள் அடங்கியது) ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இதில் பெரும்பாலானோர் ஹசாரே குழு கருத்துக்களை ஆமோதித்து பேசினர். விவாதம் துவங்கியதால் ஹசாரே போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டடது .

ஆனால் இது தொடர்பான ஓட்டெடுப்போ, தீர்மானமோ கிடையாது என நேற்று மாலை வரை அரசு விடாப்பிடியாக இருந்தது. இருப்பினும் ஹசாரேயின் பின்வாங்காத உறுதி முடிவை கண்டு மிரண்டு போனது. போராட்டத்தை முடிக்கும் எண்ணம் இல்லை என பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் அரசு எங்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், மூத் த அமைச்சர்கள் , எதிர்கட்சி தரப்பில் அத்வானி, சுஷ்மா மற்றும் கூட்டணி பிரமுகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் பார்லி.,யில் ஹசாரே வலியுறுத்திய 3 அம்சங்கள் 1. மாநிலம் முழுவதும் உள் லோக்அயுக்தா லோக்பால் வரையறைக்குள் வரவேண்டும், 2. அரசு கடை நிலைஊழியர்கள் வரை லோக்பால் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனி மனித உரிமையில் குறித்தும் விவாதம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது.

இதன் அடிப்படையில் லோக்பால் மசோதாவை பார்லி.,யில் விவாதிப்பது தொடர்பாக எம்.பி.,க்கள் கொள்கையளவில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த முடிவு பிரதமர் மற்றும் சபாநாயகர் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 10 .20 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இது குறித்து ஹசாரே கூறுகையில் இது போராட்டத்தின் அரை பகுதி வெற்றி தான் இன்னும் முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்றார்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...