Pages

Husbands are helping Their Wifes: வீட்டு வேலையில் உதவுகிறார்கள், ஆண்கள்!

வீட்டு வேலை என்றதும் நினைவுக்கு வருபவர்கள் பெண்கள் தான். காரணம், பெண்கள் அப்படி பழக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் இன்று ஆண்களுக்கு சரியாக பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். வேலைக்குப் போய் களைத்து வரும் பெண்களிடம், வீட்டு வேலையையும் நீ தான் செய்யவேண்டும் என்று அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் சொன்னால் எப்படி இருக்கும்? வேலைச்சுமையோடு மனச்சுமையும் சேர்ந்து அந்தப்பெண் மனம் நொறுங்கி விட மாட்டாளா? ஆண்களும் தங்கள் குடும்பத்துக்கு உதவும் விதத்தில் வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்வது ஒன்றும் தகாத செயல் இல்லையே?

`உத்தியோகம் புருஷ லட்சணம். வீட்டு வேலை ஸ்திரீ லட்சணம்' என்பது அந்தக்கால வாக்கு. ஆனால் இன்றைக்கு தான் நிலைமை தலைகீழாகி விட்டதே. வீட்டு வாசல்படி கூட தாண்டாத பெண்கள் இன்று ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் அவர்களும் கடுமையாக உழைக்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வதில் தான் இனிமையான வாழ்க்கையே இருக்கிறது.

இன்றைய பெண்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன்வரும் ஆண்கள் குடும்பத்திற்கே ஒரு வரப்பிரசாதம் தான். வெளியில் வேலை செய்து களைத்து வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, வீட்டில் தனக்கு உதவ ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே நிம்மதியை தரும். அதை விடுத்து, `வீட்டு வேலை பெண்களுக்கானது. வேலை முடித்து எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் தான் அதை செய்ய வேண்டும்' என்ற வாதம் பெண்களை மன அழுத்தத்தில் கொண்டு விட்டு விடும். இந்த மன அழுத்தம் நாளடைவில் பல்வேறு நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு பழக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்ப சுமைகளில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு ஆணிடம் இருக்குமானால் வீட்டு வேலைகள் ஒன்றும் கடினமில்லை. சமைத்த உணவை டிபன் பாக்ஸில் போடலாம். குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யலாம், காய்கறி நறுக்கலாம், துணி உலர்த்தலாம். இப்படி பல வேலைகள் செய்யலாம்.

இதில் முன்னேற்றமாக இப்போது பல ஆண்கள் சமைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இது மனைவிக்கு உதவுவதற்கு மட்டுமல்ல. அவர்களுக்கும் சமயத்தில் பயன்படும். வெளியூர்களில் சென்று தங்கும் நிலைமை ஏற்பட்டால் வாய்க்கு ருசியாக சாப்பிட இந்த சமையல் கைகொடுக்கும்.

காலத்திற்கு ஏற்ப ஆண்கள் மாறிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனாலும் இன்னும் சில ஆண்கள் மாறாமல் அதிகார பிரியர்களாகவே இருக்கிறார்கள். ``டிபன் ரெடியா, என்னோட சாக்ஸ் எங்கே? டவல் எங்கே? சாவி எடு. எத்தனை தடவை சொல்றது, இத இங்கே வைக்காதேன்னு, சீக்கிரம் வா...'' என்பது போன்ற பல கட்டளைகளை நிமிடத்துக்கு நிமிடம் பிறப்பித்து கொண்டே இருப்பார்கள். இதனால் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கும் நம்மைப் போல வெளியிலும், வீட்டிலும் பல கடமைகள் இருக்கிறது என்பதை ஏனோ மறந்து செயல்படுகிறார்கள். இதன் விளைவு, மனைவியின் எரிச்சலுக்கு ஆளாகி குடும்பத்தின் நிம்மதிக்கு உலை வைத்து விடுகிறார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் மனிதனால் தான் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். குடும்பத்தினரின் மன மகிழ்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது. வெளிநாடுகளில் மக்கள் இதை உணர்ந்து செயல்படுகிறார்கள். பெண்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருப்பது வேலைப்பளு தான் என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வாக வேலை பகிர்வு ஒன்றுதான் சரியானது என்று மனநல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பெண்கள் முன் வந்திருக்கும் இந்த தருணத்தில், ஆண்களும் அவர்களுக்கு அனுசரணையாக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது தானே முறை. இதற்காக ஒரு சட்டமோ, உத்தரவோ போட முடியாது. இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான செயல். குடும்ப நலனுக்காக ஆண்கள் தங்களை மாற்றிக்கொள்வது ஆரோக்கியமான சமுதாய மலர்ச்சிக்கான ஆரம்பம்.

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியாத, அல்லது போதுமான அவகாசம் இல்லாத ஆண்கள் குறைந்தபட்சம் தங்களுடைய வேலைகளை மட்டுமாவது தாங்களே செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வது தவறொன்றும் இல்லையே!

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...