Pages

Thabu Sankar Kavithaigal: தபூ சங்கர் கவிதை - தாய்க்குப் பின் கணவன்

தாய்க்குப் பின் கணவன் - தபூ சங்கர் கவிதை
Thabu Sankar
Thabu Sankar Kavithaigal

‘‘அறுபதாங் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று
நம் பிள்ளை சொன்னதற்கு
ஏன் வேண்டாம் என்றீர்கள்?’’ என்றேன்
‘‘கணவருக்கு அறுபது வயதான உடனேயே
அறுபதாங் கல்யாணம் செய்துகொள்ள
வேண்டுமா என்ன?
உனக்கு அறுபது வயதாகும்போது
செய்து கொள்ளலாம்’’ என்றீர்கள்.
‘என்ன... இந்த வயதிலும் புரட்சியா?’ என்றேன்.
‘இல்லை... காதல்’ என்றீர்கள்.
பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருக்கும்
நம் மகள்
என் தலை முடியைப் பார்த்து
‘என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு’ என்றதும்
குறுக்கே புகுந்த நீங்கள்
‘‘இது நரையா...
முப்பது வருடங்களாய் மல்லிகைப்பூவைச் சூடி சூடி
இவள் கூந்தலும்
மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது’’ என்றீர்கள்.
‘‘அப்பா உன்னை விட்டுக்கொடுக்கவே
மாட்டாரே’’ என்றாள் மகள்.
கட்டிக் கொண்டவளை விட்டுக்கொடுக்க
அவருக்குத் தெரியாது மகளே!
இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
உங்கள் முகத்தில்தான்
நான் கண்விழிக்க ஆசைப்படுகிறேன் என்றாலும்...
இப்போதெல்லாம் தூங்குவதற்குமுன்
கொஞ்சநேரம் உங்களை
இமைக்காமல் பார்த்துவிட்டுத்தான்
கண்மூடுகிறேன்.
ஒருவேளை,
தூக்கத்திலேயே என் உயிர் பிரிந்தால்
கடைசியாக நான் பார்த்தது
நீங்களாகத்தான் இருக்க வேண்டும்!
‘வேலையிலிருந்து ஓய்வு
பெறும் நாளில் எல்லோரும்
வருத்தத்துடன்தானே இருப்பார்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக
இருக்கிறீர்களே’ என்று
நம் பிள்ளை கேட்டதற்கு
‘இனிமே நாள் முழுவதும்
உன் அம்மாவோடு இருக்கலாமே’ என்றா சொல்வீர்,
என் வெட்கங்கெட்ட அரைக் கிழவரே.
‘தாய்க்குப்பின் தாரம்’ என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்.
என் கல்லறையில்
‘தாய்க்குப் பின் கணவன்’ என்று
புதியதொரு மொழியை எழுதி வையுங்கள்.
Visit தபூ சங்கர் கவிதை blog for more தபூ சங்கர் கவிதை

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...